நேபாள வெள்ள அனர்த்தத்தில் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
இமயமலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவினால் லெண்டே ஆற்றின் குறுக்கே உருவாகிய தற்காலிக இயற்கை அணை உடைந்ததே இந்த பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
இதனால் போதே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் வெள்ளநீர் பேரிரைச்சலுடன் சீறிப் பாய்ந்து கரையோர கிராமங்களைச் சூறையாடியுள்ளது.

இந்த எதிர்பாராத வெள்ளப்பெருக்கில் நேபாளத்தின் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட சுமார் 600 பயணிகள் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது.
மேலும், சீனா-நேபாள எல்லையிலுள்ள கியிரோங் வர்த்தகக் கணவாய், முக்கிய சர்வதேசப் பாலங்கள் மற்றும் பல நீர்மின் திட்டங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அப்பகுதியின் உள்கட்டமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது.
தொடர் மழை மற்றும் தடிமனான சேறு காரணமாகப் பாதிக்கப்பட்ட மலைப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் மற்றும் ஹெலிகாப்டர்கள் செல்வதில் கடும் சிரமம் நிலவி வருகிறது.
அதேவேளையில், நேபாள ஆறுகளில் இருந்து பெருக்கெடுக்கும் மேலதிக நீர் காரணமாக இந்தியாவின் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லைப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.