நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ; அடித்து செல்லப்பட்ட ஆறு பாலங்கள் ; 10 பேர் மாயம்
நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வெள்ளத்தில் ஆறு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சுமார் 35 வீடுகளும் அழிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக நேபாள இராணுவத்தினர் மற்றும் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்காக ஹெலிகொப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து ஆறு பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக நேபாள இராணுவம் அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.