ஈரானுக்கு எதிராக அதிரடி காட்டத் தயாராகும் இஸ்ரேல்
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் இஸ்ரேல் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்த வாரம் வாஷிங்டனுக்கு மேற்கொள்ளும் விஜயத்தின் போது, ஈரானுக்கு எதிரான சாத்தியமான இராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் எதிர்கால சூழ்நிலைக்கு தயாராக இருப்பதற்கான மாற்றுத் திட்டங்களை இஸ்ரேல் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தொடக்கநிலை பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும் என இஸ்ரேல் சந்தேகத்துடன் இருப்பதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, எந்த ஒப்பந்தமும் கையெழுத்தானாலும், இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் தனித்த இராணுவ நடவடிக்கை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை நேதன்யாகு வலியுறுத்தவுள்ளார்.
வாஷிங்டனில் ட்ரம்பை சந்திக்கும் போது, ஈரானின் இராணுவ திறன்கள் குறித்த புதிய உளவுத்தகவல்களை நேதன்யாகு முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
12 நாள் போர் காலத்திற்கு முந்தைய நிலைக்கு ஈரான் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கையிருப்பை மீண்டும் உருவாக்கி வருவதாக இஸ்ரேல் கவலை தெரிவித்துள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் ஈரானிடம் 1,800 முதல் 2,000 வரை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இருக்கலாம் என இஸ்ரேல் மதிப்பிடுவதாக ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. ஈரான் தரப்பு, தாங்கள் போரைக் விரும்பவில்லை என்றாலும், அதற்குத் தயாராக உள்ளதாக பலமுறை தெரிவித்துள்ளது.
வாஷிங்டனுக்கு புறப்படும் முன் பேசிய நேதன்யாகு, “ஈரான் விவகாரம் தான் முதன்மை மற்றும் மிக முக்கியமான அம்சம்” என கூறினார்.
ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து இரு தலைவர்களுக்கிடையிலான ஏழாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.