திடீரென அமெரிக்காவிலிருந்த தங்கத்தை லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து
உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், நெதர்லாந்து மத்திய வங்கி தனது தங்கக் கையிருப்பில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 2026 மார்ச் முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில், அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் கனடாவின் ஒட்டாவாவில் வைக்கப்பட்டிருந்த 86 டன் தங்கம் லண்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நெருக்கடி நிலைமைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக நெதர்லாந்து மத்திய வங்கி (DNB) தெரிவித்துள்ளது.
உலகளாவிய நம்பிக்கைக்குரிய சொத்தாகக் கருதப்படும் தங்கம், கடுமையான நிதி அல்லது பொருளாதார நெருக்கடிகளின் போது பாதுகாப்பான கையிருப்பாக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள Bank of England-இல் சேமிக்கப்படும் தங்கம் சர்வதேச வர்த்தக தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதால், அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் அதனை விரைவாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக நெதர்லாந்து மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மாற்றங்களுக்கு முன்னதாக, நெதர்லாந்தின் தங்கக் கையிருப்பில் 31.3 சதவீதம் நியூயோர்க்கிலும், 19.7 சதவீதம் ஒட்டாவாவிலும் வைக்கப்பட்டிருந்தன.
மாற்றங்களுக்குப் பின்னர், நியூயோர்க் மற்றும் ஒட்டாவாவில் தலா 18.5 சதவீதம் தங்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நெதர்லாந்தின் மொத்த தங்கக் கையிருப்பில் 32.1 சதவீதம் லண்டனிலும், 30.8 சதவீதம் நெதர்லாந்தின் Zeist நகரிலும், 18.5 சதவீதம் நியூயோர்க்கிலும், 18.5 சதவீதம் ஒட்டாவாவிலும் வைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்திடம் மொத்தம் 612.4 டன் தங்கம் உள்ளதாகவும், 2025ஆம் ஆண்டு இறுதியில் அதன் மதிப்பு சுமார் 72.2 பில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், 27 டன் தங்கம் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து நெதர்லாந்தின் Zeist நகரில் உள்ள பாதுகாப்பான களஞ்சியத்திற்குக் கொண்டு வரப்பட்டதுடன், அதே அளவு தங்கம் Zeist-இல் இருந்து லண்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும், நியூயோர்க்கில் இருந்த 59 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டு, அதற்கு இணையான 59 டன் தங்கம் லண்டனில் புதிதாக வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை அதிகரித்து வரும் சூழலில், நெதர்லாந்தின் இந்த நடவடிக்கை அதன் தங்கக் கையிருப்பை நெருக்கடி காலங்களில் விரைவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் மறுசீரமைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.