மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகன உரிமையாளர்களுக்கு மேலதிக பதிவுக் கட்டணம்!
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் மின்சார மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்களை வைத்திருப்போர், எதிர்வரும் புத்தாண்டு முதல் மேலதிக வாகனப் பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் வாகனக் காப்புறுதிச் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2027 ஜனவரி 1-ஆம் திகதி முதல் இந்தப் புதிய கட்டண நடைமுறை அமுலுக்கு வருகிறது.
ஆண்டுக்கு 125 டொலர்கள், ஆண்டுக்கு 62.50 டொலர்கள் என்ற அடிப்படையில் கட்டணங்கள் அறவீடு செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தை முதன்முறையாகப் பதிவு செய்யும்போதும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் வாகனப் பதிவைப் புதுப்பிக்கும்போதும் இந்த மேலதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என இணையதள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகன உரிமையாளர்கள் எரிபொருள் வரி செலுத்துவதன் மூலம் வீதிப் பராமரிப்பு மற்றும் பொதுப் போக்குவரத்துத் திட்டங்களுக்குப் பங்களிக்கின்றனர்.
அதேபோல், மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகன உரிமையாளர்களும் மாகாணத்தின் வீதி வலையமைப்பு மற்றும் பொதுப் போக்குவரத்து நிதியத்திற்குப் பங்களிப்பதை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்தக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
2025-ஆம் ஆண்டு கியூபெக் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.