அமெரிக்கா – சீனா வர்த்தக உறவில் புதிய முன்னேற்றம் ; வரிக் குறைப்புக்கு பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் சீனா இடையே இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு நாடுகளும் விரைவில் உடன்பாட்டை எட்டக்கூடும் என சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பாக இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக சீன தரப்பு தெரிவித்துள்ளது.
இரு நாட்டு தலைவர்களும் விரைவில் சந்திக்கவுள்ள நிலையில், வரிக் குறைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன செய்தித் தொடர்பாளர் ஹுவாங் லிங், செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான இந்த ஆண்டின் மூன்றாவது சந்திப்பு செப்டம்பர் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில், இந்த சந்திப்பை முன்னிட்டு வரிக் குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மே மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற இரு தலைவர்களின் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நிர்வாகத்தை மேம்படுத்த வர்த்தக வாரியம் மற்றும் முதலீட்டு வாரியம் அமைப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டிருந்தது.
சீனப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவும் பதிலடியாக அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமான வர்த்தகப் போர் உருவானது. இந்த நிலையில், பதற்றத்தைத் தணித்து வர்த்தக உறவுகளை சீரமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் வரி குறைப்பு முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளிலும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பொருட்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கான வரிகளை குறைப்பதே பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் சீனா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய தற்காலிக வர்த்தக சமாதான ஒப்பந்தம் நவம்பர் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே விரிவான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் வரிக் குறைப்புகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் பார்க்லேஸ் வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.