230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து புதிய சாதனை
பிரான்ஸில் இருந்து ஒரு சிறிய ரப்பர் படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்து புதிய சாதனையைப் பதிவுசெய்துள்ளனர்.
போயிங் 737 பயணிகள் விமானத்தின் கொள்ளளவுக்குச் சமமான எண்ணிக்கையிலான மக்களை ஏற்றி சென்ற மெகா படகு எனவும் , பிரித்தானியாவை நோக்கிய சட்டவிரோதப் பயணங்களில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கையாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டில் 15,049 சட்டவிரோதக் குடியேறிகள்
அதேசமயம் கடந்த ஜூலை மாதம் ஒரே படகில் 165 பேர் பயணித்ததே இதுவரை அதிகளவானவர்கள் பயணித்ததாக இருந்தது. தற்போதைய 230 பேர் பயணம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
இந்த புதிய வருகையுடன், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 224 சிறிய படகுகள் மூலம் மொத்தம் 15,049 சட்டவிரோதக் குடியேறிகள் பிரித்தானியாவை அடைந்துள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படையினரும் RNLI உயிர் மீட்புக் படகுகளும் இப் படகைக் கடலிலேயே இடைமறித்து டோவர் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளன.
கடந்த வார இறுதியில் மட்டும் சுமார் 950 குடியேற்றவாசிகள் டோவர் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கூறுகையில்,
"மனித கடத்தல் கும்பல்கள் மக்களின் உயிரைப் பணைய வைத்து, கடல் பயணத்திற்கு ஒத்துவராத படகுகளில் அதிகளவு மக்களைக் திணித்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதையே இது காட்டுகிறது. எனினும், கடந்த ஜூலை மாதத்தில் 2020க்குப் பின்னரான குறைந்தபட்ச வருகையே பதிவாகியுள்ளது.
பிரெஞ்சு கடற்கரைகளில் மேலதிகப் படைகளை நிறுத்துவதற்கு பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரித்தானியாவின் ரிஃபார்ம் யூகே கட்சித் தலைவர் நைஜல் பரேஜ் ,
"இந்தச் சட்டவிரோத ஊடுருவல் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட பெரும் அவசரநிலை என்பதற்கான மற்றொரு சான்றாகும்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.