காசா விவகாரத்தில் அமெரிக்கா–இஸ்ரேல் உறவில் புதிய விரிசல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள காசா அமைதி சபை தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் அமைத்துள்ள காசா நிர்வாகக் குழுவில், துருக்கி மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டுள்ளதே நெதன்யாகுவின் கோபத்திற்கு முக்கிய காரணமாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அமைதிச் சபையின் உறுப்பினர்கள் குறித்து இஸ்ரேலுடன் முன் கூட்டியே ஆலோசிக்கப்படவில்லை எனவும் இந்த முடிவு இஸ்ரேலின் பாதுகாப்புக் கொள்கைக்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய துருக்கி மற்றும் கட்டார் போன்ற நாடுகள் காசாவின் நிர்வாகத்தில் ஈடுபடுவது ஹமாஸ் மீண்டும் வலுப்பெற வழிவகுக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது.
நெதன்யாகுவின் அமைச்சரவையில் உள்ள தீவிர வலதுசாரி அமைச்சர்களான இத்தாமர் பென் கிவிர் (Itamar Ben Gvir) மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) ஆகியோரும் இந்தத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
"ஹமாஸை உயிருடன் வைத்திருக்க உதவிய நாடுகள், அந்த இடத்திற்கு மாற்றாக வர முடியாது" என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இஸ்ரேலின் இந்த எதிர்ப்பிற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், "நாங்கள் பல மாதங்களாகக் காசாவில் யாரும் சாத்தியமில்லை என்று நினைத்த காரியங்களைச் செய்துள்ளோம்.
இது எங்களது திட்டம், இஸ்ரேல் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.