அமெரிக்காவில் புதிய டிக் டொக் ; சீனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிரடி ஒப்பந்தம்
TikTok தமது அமெரிக்க வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்துள்ளது.
சீன நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance), தனது அமெரிக்க கிளை நிறுவனத்தை அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யத் தவறினால், 2025 ஜனவரி முதல் அமெரிக்காவில் இந்த செயலிக்குத் தடை விதிக்கப்படவிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்ட சட்டத்தை அமுல்படுத்துவதை, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பலமுறை ஒத்திவைத்தார்.
பைட்டான்ஸ் நிறுவனத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்புகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும், அமெரிக்க பயனர்களின் தரவுகளை வழங்குமாறு பீஜிங் நிறுவனம் வற்புறுத்தப்படலாம் என்றும் அமெரிக்கா அச்சம் வெளியிட்டிருந்தது.
இருப்பினும், TikTok மற்றும் ByteDance ஆகிய இரு நிறுவனங்களும் இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்திருந்தன.
இந்நிலையில், புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் டிக் டொக்கின் அமெரிக்க கிளை நிறுவனமானது தனியான தகவல் கட்டமைப்புடன் சுயாதீனமாக இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது உலகளாவிய TikTok செயலியில் இருந்து வேறுபட்டது என்பதுடன் அனைத்து தரவுகளும் அமெரிக்காவிற்குள்ளேயே சேமிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) ஒப்புக்கொண்ட உரிம ஒப்பந்தத்தின்படி, சீனப் பொறியாளர்களுக்கு இந்த அமெரிக்க கிளையின் இயக்கம், புதுப்பித்தல் அல்லது பாதுகாப்பு ஆகியவற்றில் நேரடி கட்டுப்பாடு இருக்காது என கூறப்படுகின்றது.
இந்த ஒப்பந்தம் செயலியை முழுமையாக முடக்கவில்லை என்றாலும், அமெரிக்கப் பதிப்பையும், பில்லியன் கணக்கான மக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் டிக்டொக்கின் சக்திவாய்ந்த அமைப்பும் மாறுபடும் என தெரிவிக்கப்படுகின்றது.