காசா போரில் புதிய திருப்பம் ; 3D வரைபடத்துடன் சுரங்கம் வெளிச்சம்
காசா முனையில் நடைபெற்று வரும் போர்ச் சூழ்நிலைக்கு மத்தியில், வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 11 கிலோமீற்றர் நீளமுள்ள பாரிய நிலத்தடி சுரங்கப் பாதை வலையமைப்பை முற்றிலுமாக அழித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தின் பொறியியல் பிரிவு முன்னெடுத்த நீண்டகால விசேட நடவடிக்கையின் போது இந்த சுரங்க வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கடியில் பல மீற்றர் ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த சுரங்கப் பாதைகள், ஆயுதங்களைச் சேமித்தல், போராளிகள் ரகசியமாக நகர்தல் மற்றும் நூற்றுக்கணக்கானோர் தங்கியிருப்பதற்கான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்ததாக இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சுரங்க வலையமைப்பின் பரப்பளவு மற்றும் அது இணைத்திருந்த பகுதிகளை வெளிப்படுத்தும் வகையில், அதன் முப்பரிமாண (3D) வரைபடத்தையும் இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ளது.
அந்த வரைபடத்தின் அடிப்படையில் சுரங்கப்பாதையின் முக்கிய இடங்களில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பொருத்தப்பட்டு, முழு கட்டமைப்பும் தகர்த்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மோதல்களுக்கு மத்தியில், ஹமாஸ் அமைப்பின் நிலத்தடி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேலியப் படைகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.