கனடாவில் மிகவும் தேடப்பட்டவர் ஸ்பெய்னில் கைது
கனடா பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மிக ஆபத்தான மற்றும் முதன்மை குற்றவாளியான ஆல் போவின் என்பவரை ஸ்பெயின் பொலிஸார் கடந்த வாரம் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்தக் கைது நடவடிக்கை தொடர்பான அதிரடி வீடியோ மற்றும் சுவாரசியமான பல விபரங்களை ஸ்பெயின் உள்துறை அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஆல் போவின், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பொலிஸாரிடம் சிக்காமல் சர்வதேச அளவில் தலைமறைவாக இருந்து வந்தார்.

கடந்த வாரம் ஸ்பெயினின் தெற்கு கடலோர நகரமான மார்பெல்லாவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். கனடாவில் கைது செய்யப்பட்ட பிரையன் புவெண்டஸ் என்ற முதலைக் குற்றவாளிக்கு அடுத்தபடியாக, கனடாவின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் ஆல் போவின் முதலிடத்தில் இருந்தார்.
2022 ஆம் ஆண்டில் கியூபெக் நகரில் மோட்டார் சைக்கிள் குழுக்களுக்கு இடையே நடந்த பயங்கரவாத மோதல்களுடன் இவருக்கு நேரடித் தொடர்பு இருந்தது.
இவர் மீது போதைப்பொருள் கடத்தல், திட்டமிட்ட குற்றங்கள், கடத்தல், சட்டவிரோதமாக சிறைபிடித்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் கடுமையான வன்முறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஸ்பெயின் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஆல் போவின் மார்பெல்லா நகரில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்துள்ளார்.
பொலிஸாரின் கண்ணில் படாமல் இருக்க அவர் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. அத்துடன், தன்னைச் சந்திக்க வரும் சகாக்களுக்கும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை விதித்திருந்தார்.
அனைத்திற்கும் மேலாக, பொலிஸார் தன்னை அடையாளம் காண்பதைத் தடுப்பதற்காக, தன்னுடைய உடலில் இருந்த பச்சை குத்தல்களை (Tattoos) அவர் லேசர் மூலம் அழித்து வந்துள்ளார். அவரது இரு கைகளிலும், கழுத்தின் வலது பக்கத்தில் 'Gucci' என்றும் பெரியளவில் பச்சை குத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின் தேசிய பொலிஸார் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேடப்படும் குற்றவாளிகளைக் கண்டறியும் சிறப்புப் படை (ENFAST) இணைந்து சுமார் 10 மாதங்களாக இரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டு, இவரின் மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர்.
கடந்த வாரம், அவர் அரிதாக வீட்டை விட்டு வெளியேறி வாகனத்தில் ஏற முயன்றபோது, பொலிஸார் அவரைச் சூழ்ந்து கைது செய்தனர். ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ள 21 விநாடிகள் கொண்ட வீடியோவில், முகமூடி அணிந்த இரு பொலிஸ் அதிகாரிகள் ஆல் போவினின் கைகளில் விலங்கிட்டு பொலிஸ் வாகனத்திற்குள் ஏற்றிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2023 பிப்ரவரி முதல் தலைமறைவாக இருந்த இவரின் கைது நடவடிக்கை, திட்டமிட்ட சர்வதேசக் குற்றக் கும்பல்களுக்கு எதிரான போரில் கிடைத்துள்ள ஒரு "மிகப்பெரிய வெற்றி" என கனடாவின் கியூபெக் பொலிஸார் பாராட்டியுள்ளனர்.