ஒவ்வொரு குடிமகனுக்கும் 200 டொலர்: புத்தாண்டு பரிசாக அறிவித்த நாடு
தைவான் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 200 டொலர் புத்தாண்டு பரிசாக அளிக்க இருப்பதாக நாட்டின் தலைவர் அறிவித்துள்ளார்.
தீவு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஒருபகுதியை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதே இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை நம்பியிருக்கும் தைவான், செமிகண்டக்டர் சிப்ஸ் உட்பட தயாரிப்புகளுக்கான உலகளாவிய தொழில்நுட்ப மையமாக உருவாகியுள்ளது.
2021ல் மட்டும் 6.45% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால் 2022 மற்றும் 2023ல் பொருளாதார வளர்ச்சியானது சரிவினை சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டில் வரி வருவாயாக 12.4 பில்லியன் டொலர் தொகையை தைவான் ஈட்டியுள்ளது.
இதில் ஒருபகுதியை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க தைவான் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்தவகையில் தைவான் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 200 டொலர் வரையில் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
குறித்த தொகையானது லூனார் புத்தாண்டு தொடங்குவதற்கு முன்னர் புத்தாண்டு பரிசாக அளிக்கப்பட உள்ளது. ஜனவரி 20ம் திகதி தொடங்கி ஒருவார காலம் லூனார் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட இருக்கிறது.
ஆனால், குறித்த தொகையை அரசாங்கம் எவ்வாறு மக்களிடம் சேர்க்க இருக்கிறது என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.