நியூயோர்க் நகரில் மாணவர்களுக்கு AI பயன்படுத்த தடை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மாணவர்கள், உயர்நிலை பாடசாலை செல்லும் வரை ஏஐ (AI) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நியூயோர்க் நகரில் மாணவர்களின் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
நியூயோர்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி தலைமையிலான நிர்வாகம் இந்த புதிய கொள்கையை அறிவித்துள்ளது.

இதன்படி, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பாடசாலை மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வரை செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் மட்டுமே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.
அதிலும் பாடத்திட்டங்களை உருவாக்குதல், பாடங்களை மொழிபெயர்த்தல் மற்றும் செய்தி எழுதுதல் போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக மட்டுமே ஏஐ பயன்படுத்தப்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கொள்கையின் காரணமாக நியூயோர்க் நகரில் சுமார் 6 இலட்சம் மாணவர்கள் உயர்நிலைப் பாடசாலைக்குச் செல்லும் வரை ஏஐ கருவிகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது நகரப் பாடசாலைகளில் உள்ள மொத்த மாணவர்களின் மூன்றில் இரண்டு பங்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், மாணவர்களின் டிஜிட்டல் சாதனப் பயன்பாடு மற்றும் திரை நேரத்திற்கும் புதிய வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை. நடுநிலைப் பாடசாலை மாணவர்கள் தினமும் அதிகபட்சம் 45 நிமிடங்கள் மட்டுமே டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், மன ரீதியாக அல்லது உணர்ச்சிப்பூர்வமாக மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் செயல்படும் ஏஐ சாட்பாட்களை அனைத்து மாணவர்களும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேயர் ஜோஹ்ரான் மம்தானி, தொடக்கக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அத்தியாவசியமானது என மக்கள் நம்ப வேண்டும் என்று தொழில்துறையினர் விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
எனினும், தொடக்கக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு ஒரு அங்கமாக இருப்பதை நியூயோர்க் நகர மக்கள் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.