பிரிட்டனில் ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக பெண் மருத்துவர் மீது குற்றச்சாட்டு
பிரிட்டனில் ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதாரச் சேவை பெண் மருத்துவர் ஒருவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
முந்தைய கைதுகளைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட காவல்துறை பிணை நிபந்தனைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 31 வயதான மருத்துவர் ரஹ்மே அலத்வான் (Rahmeh Aladwa), கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு குளோசெஸ்டர்ஷையரின் பில்னிங்கில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றைய (26) தினம் பெருநகர காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் மத்திய லண்டன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மீது, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டுகள் கடந்த ஆண்டு ஜூலை 23 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில், இணையத்தில் அவர் பதிவிடப்பட்ட கருத்துகள் மற்றும் உள்ளடக்கம் தொடர்பானவை என்றும் லண்டன் பெருநகர காவல்துறை குறிப்பிட்டுள்ளது.