கனடாவில் மூன்று ஆண்டுகளாக பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு தம்பதி கைது
கனடாவின் நயாகரா பகுதியில், மூன்று ஆண்டுகளாக நீடித்து வந்த பாலியல் தாக்குதல் தொடர்பான விசாரணையின் கீழ் ஒரு தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2022 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
இச்சம்பவங்களில் மூன்று தனி நபர்கள் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஜனவரி 7 அன்று போர்ட் கொல்போர்ன் நகரைச் சேர்ந்த 39 வயதுடைய ஜேம்ஸ் மெக்மேனமன் மற்றும் நயாகரா ஃபால்ஸைச் சேர்ந்த 29 வயதுடைய ஜெனிஃபர் ஹாரிகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜேம்ஸ் மெக்மேனமன் மீது மூன்று பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, ஜெனிஃபர் ஹாரிகன் மீது இளம் வயதுடைய ஒருவரை பாலியல் சுரண்டலுக்குத் தூண்டுதல் அல்லது ஆலோசனை வழங்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜெனிஃபர் ஹாரிகன் நயாகரா பிராந்தியத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் சியர்லீடிங் சமூகங்களில் பணியாற்றியவர் எனவும், இதன் காரணமாக மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் உள்ளவர்கள் 905-688-4111 என்ற இலக்கத்தில் நயாகரா பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறும், அல்லது குற்றத் தகவல் சேவையின் (Crime Stoppers) மூலம் அடையாளம் தெரிவிக்காமல் தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.