கனடாவில் பூனையை கொடூரமாக சித்திரவதை செய்த நபர் கைது!
கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள விடுதியொன்றில் பூனையொன்றைக் கொடூரமாகக் கட்டிவைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பீட்டர் க்ரசூல் என்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் லண்டீஸ் லேன் மற்றும் மொன்ட்ரோஸ் வீதி சந்திப்பிற்கு அருகிலுள்ள விடுதியொன்றிலிருந்து மிக மோசமான நிலையில், உடல் மெலிந்து கட்டப்பட்டிருந்த பூனையொன்றை அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீட்டு மிருக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
எனினும், அப்பூனையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், அதனைக் காப்பாற்ற முடியாமல் கருணைக்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மாகாண விலங்கு நல சேவைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, நயாகரா பிராந்திய பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.
நீதிமன்ற உத்தரவைப் பெற்று திங்கள்கிழமை குறித்த விடுதி அறைக்குள் நுழைந்து சோதனையிட்ட பொலிஸார், பூனையைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கைப்பற்றினர்.
அதனையடுத்து பீட்டர் க்ரசூல் கைது செய்யப்பட்டதுடன், அவர் மீது விலங்குக்குத் தீங்கு விளைவித்தமை மற்றும் மிருகப் புணர்ச்சி ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.