கனடாவில் வாகன கொள்ளையில் ஈடுபட்ட 30 பேர் கைது
கனடாவின் நயாகரா பகுதியில் பாரியளவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புரொஜெக்ட் ரோட் கிங் என்ற பெயரில் பல மாதங்கள் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிபப்டையில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் போதைப்பொருட்கள், துப்பாக்கிகள், ரொக்கம் மற்றும் திருடப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2024 ஆகஸ்டில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைத்ததையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் விசாரணகள் விரிவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரொரன்டோ பொலிஸார், கனடிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கனடிய பொலிஸார் ஆகிய தரப்புக்கள் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ம் திகதி நயாகரா, ஹாமில்டன், டொரோண்டோ உள்ளிட்ட பகுதிகளில் 12 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன் மூலம் 38 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டதகாவும், அவற்றின் மதிப்பு 3.3 மில்லியன் கனேடிய டொலர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சில வாகனங்கள் நைஜீரியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு கடத்துவதற்காக கண்டெய்னர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
சில வாகனங்களில் தொகுதி எண்கள் (VIN) மாற்றப்பட்டிருந்ததால் அவற்றின் உண்மையான அடையாளத்தை கண்டறிவது கடினமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், 12.25 கிலோ கோக்கெயின் மற்றும் 20 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.