கனடாவில் இந்த வகை மருந்து குறித்து எச்சரிக்கை
கனடாவில் பயன்படுத்தப்படும் மருந்து வகையொன்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாக்டீரியா மற்றும் ஒவ்வாமைக்கான பொதுவான மருந்தான 'பெனட்ரில்' (Benadryl)-ஐ இளைஞர்கள் ஆபத்தான முறையில் போதைக்காக அதிக அளவில் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
நிபிசிங் ஃபர்ஸ்ட் நேஷன் பழங்குடியின சமூகத்தில் இந்த சம்பவங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கள் சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தங்களுக்கு ஒருவித உற்சாகம் அல்லது வித்தியாசமான உணர்வு கிடைக்கும் என்ற தவறான எண்ணத்தில், இந்த மருந்தினை ஆபத்தான அளவில் உட்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிக அளவில் மருந்தை உட்கொள்வதால் எந்தவொரு நேர்மறையான விளைவும் ஏற்படாது என்றும், மாறாக அது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்றும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
வயது, உடல் எடை, ஆரோக்கிய நிலை மற்றும் பிற மருந்துகளின் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து இந்த ஆன்டிஹிஸ்டமைன் மருந்தின் பாதுகாப்பான அளவு நபருக்கு நபர் மாறுபடும் என்பதால், இதனைத் தவறாகப் பயன்படுத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெனட்ரில் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதன் அறிகுறிகளாக அதிக பதற்றம், வழக்கத்திற்கு மாறான அதிவேக இதயத்துடிப்பு, எரிச்சலூட்டும் குணம், இல்லாதவற்றை காண்பது அல்லது கேட்பது போன்ற மாயத்தோற்றங்கள் மற்றும் வலிப்பு போன்றவை ஏற்படும் என நிபிசிங் ஃபர்ஸ்ட் நேஷன் அமைப்பு பட்டியலிட்டுள்ளது.
இதன் தீவிரத்தன்மை அதிகரிக்கும் போது கடுமையான தூக்கக் கலக்கம், மெதுவான சுவாசம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், கோமா நிலை மற்றும் மரணம் கூட நிகழலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.