தாதியின் வெறிச் செயல் ; இரவு பணிச்சுமையால் நோயாளர்களுக்கு விஷ ஊசி ஏற்றி கொலை
ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆண் தாதியாக 2020 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பணி காலத்தில், நோயாளிகளைப் பராமரிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊசி போட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு மே வரையில் நடந்துள்ளது.

10 நோயாளிகள் கொலை
அப்போது, இது போன்று 10 நோயாளிகளைக் கொலை செய்துள்ளார். 27 பேரைக் கொல்ல முயற்சியும் செய்துள்ளார்.
இரவு நேர பணியின்போது, பணிச் சுமை கூடுதலாக இருக்கிறது என உணர்ந்த அவர், இந்த முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை ஆச்சன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதில், 15 ஆண்டுகளுக்குக் குறையாமல் வெளியே வர முடியாதபடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவர் மேன்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், மீண்டும் அவருக்கு எதிராக விசாரணை நடக்கும் என தெரிகிறது.
2019 ஆம் ஆண்டில் நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் தாதி ஒருவர் வடக்கு ஜெர்மனியில் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையில் நோயாளிகளுக்கு அதிக டோஸ் மருந்துகளைக் கொடுத்ததில் பலர் உயிரிழந்தனர். ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூர கொலைகாரர் இவர் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து மற்றொரு கொடூர வழக்கு தெரிய வந்துள்ளது.