பெண்களுக்கு சிலிகான் ஊசி போட்ட கனேடிய செவிலியர்: வெளிவரும் முழு பின்னணி
கனடாவில் 8 பெண்களுக்கு சிலிகான் ஊசி போட்டு, ஒருவரின் இறப்புக்கு காரணமான செவிலியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வாகன் பகுதியை சேர்ந்த 44 வயது செவிலியர் Anna Yakubovsky-Rositsan என்பவரே சட்டவிரோதமாக 8 பெண்களுக்கு சிலிகான் ஊசி போட்டுள்ளார்.
பதிவு செய்த செவிலியர் என்பதால், குறித்த 8 பெண்களும் இவரை நம்பியே குறிப்பிட்ட சிகிச்சைக்காக நாடியுள்ளனர். அதில் 23 வயதான Chanel Steben என்பவர் 2017 ஏப்ரல் மாதம் தமது பின்புறத்தில் சிலிகான் ஊசி போட்டுக்கொள்ள குறித்த செவிலியரை நாடியுள்ளார்.
கனடாவில் சட்டவிரோதமாக கருதப்படும் PMMA-வையே ஊசியால் செலுத்தப்படுவதாக அந்த இளம் பெண் கருதியுள்ளார். ஆனால் ஊசி போட்டுக்கொண்ட சில மணி நேரத்தில் அவருக்கு வலிப்பு வந்துள்ளதுடன், தரையில் சுருண்டு விழுந்துள்ளார்.
இதில் பதற்றமடைந்த Yakubovsky-Rositsan அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் அளிக்காமல் தவிர்த்துள்ளார். சம்பவம் நடந்து 1 மணி நேரத்திற்கு பின்னர் தமது முன்னாள் கணவரை தொடர்பு கொண்டு, உதவி கேட்டுள்ளார்.
அந்த நபரே அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார். இந்த நிலையில், Steben மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, அங்கே அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இதனிடையே, செவிலியர் தமக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தையும் வீட்டில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளார். ஆனால் அவரது காரில் இருந்து குறிப்பிடத்தக்க ஆதாரங்களை திரட்டியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்ட செவிலியர் Yakubovsky-Rositsan கடந்த ஆகஸ்டு மாதம் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டார். இதனையடுத்து தற்போது அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.