தலையில் குண்டு பாய்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் வீடு திரும்பினார்
அவுஸ்திரேலியாவின் பொன்டி கடற்கரை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலின் போது தலையில் குண்டு பாய்ந்து காயமடைந்த இளம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்போது மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.
22 வயதான ஜாக் ஹிபர்ட் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்திருந்தார்.
பணியில் சேர்ந்த நான்கு மாதங்களே ஆன நிலையில், ஹனுக்கா விழா நடைபெற்று வந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

அப்போது இரு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 15 பேர் உயிரிழந்தனர்.
தலையில் மற்றும் தோள்பகுதியில் குண்டு பாய்ந்த ஹிபர்ட், தனது ஒரு கண் பார்வையை இழந்துள்ளார்.
இருப்பினும், தற்போது அவர் வீடு திரும்பி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
“எங்கள் குடும்பத்துக்கு இதைவிட பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை. குறிப்பாக கிறிஸ்துமஸ் காலத்தில் எங்கள் ஜாக் வீட்டுக்கு திரும்பியது ஒரு அதிசயம் போல உள்ளது,” என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
மேலும், பொதுமக்களிடமிருந்து கிடைத்த பெரும் ஆதரவுக்கும், மருத்துவ பணியாளர்கள் வழங்கிய சிறப்பான சிகிச்சை மற்றும் அர்ப்பணிப்பிற்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
“அவர் வீட்டில் இருந்தாலும், இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இந்த காலகட்டத்தில் அவருக்கு தனிமையும், ஆதரவுமும், நேர்மறை எண்ணங்களும் தேவை,” என்றும் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பின்னரும், உடல்நிலை அனுமதிக்கும் வரை விழாவில் பங்கேற்றவர்களுக்கு உதவி செய்தார் என அவரது குடும்பத்தினர் முன்பே தெரிவித்திருந்தனர்.
“அவர் ஆபத்திலிருந்து விலகவில்லை; உதவி தேவைப்பட்டவர்களிடம் சென்றார். அவரது துணிச்சலை அவரது சக காவலர்கள் எங்களிடம் எடுத்துரைத்தனர்,” என்றும் கூறப்பட்டுள்ளது.