கனடாவின் மிக வயதான பெண்மணி மேரி ரோசாவுக்கு 111-வது பிறந்தநாள்
கனடாவின் தற்போதைய மிக வயதான வாழும் நபரான மேரி ரோசா, வியாழக்கிழமை செப்டம்பர் 17, 2026) தனது 111-வது பிறந்தநாளைக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விமரிசையாகக் கொண்டாடினார்.
ஒன்டாரியோவின் எட்டோபிகோக் பகுதியில் உள்ள 'தி வில்லேஜ் ஆஃப் ஹம்பர் ஹைட்ஸ்' முதியோர் இல்லத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. செப்டம்பர் 17, 1915 அன்று பிறந்த மேரி ரோசா, கனடாவில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலத்தில் பிறந்தவர்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களைக் கடந்து வாழ்ந்த இவர், இரண்டாம் உலகப்போரின் போது தையல் கலை நிபுணராகவும் பணி மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

எல்லோரையும் நேசியுங்கள், மகிழ்ச்சியாக வாழுங்கள் என்பதே ரோசாவின் முதன்மை அறிவுரை. மேலும், அவர் காய்கறிகளை விரும்பி உண்பதும் அவரது ஆரோக்கியத்திற்கு ஒரு காரணம் என அவரது மகள் கேத்தரின் சினிலாஸோ தெரிவித்துள்ளார்.
ரோசாவின் தந்தை 105 வயது வரையிலும், சகோதரி 103 வயது வரையிலும் வாழ்ந்துள்ளனர். பெரிய அளவிலான திட்டமிடல்கள் ஏதுமின்றி, எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் ரோசாவிற்குப் பிடித்த எலுமிச்சை கேக் வெட்டப்பட்டது.
வரும் வார இறுதியில் அவரது பேரக் குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் மீண்டும் ஒரு குடும்ப விழா திட்டமிடப்பட்டுள்ளது.
முதியோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் நாதன் காஸ்டனெடா, ரோசாவை "உற்சாகத்தின் உறைவிடம்" எனக் குறிப்பிட்டு, அவர் 120 வயது வரை வாழ வேண்டும் எனத் தனது விருப்பத் வாழ்த்தைத் தெரிவித்தார்.