உயரத்தால் உலக சாதனை படைத்த கனடிய இளைஞன்
அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux), தனது முதல் கல்லூரி ஆட்டத்தில் பங்கேற்று உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை படைத்துள்ளார்.
7 அடி 9 அங்குல உயரமுடைய ரியூ, கியூபெக்கின் டெர்போன் நகரைச் சேர்ந்தவர். 19 வயதான இவர், ஏற்கனவே கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் “உலகின் உயரமான இளைஞர்” என்ற பெருமை பெற்றவர்.
ஃப்ளோரிடா அணியின் பயிற்சியாளர் டாட் கோல்டன் (Todd Golden), ரசிகர்களின் கோரிக்கையின்படி இறுதியில் ரியூவை ஆட்டத்தில் இறக்கினார்.

அனைவரின் ஆதரவும் அற்புதமானது — ரசிகர்களிடமிருந்து, வீரர்களிடமிருந்து, எனது அணியிலிருந்தும் — இது உண்மையிலேயே மனதை வருடியது என்று ரியூ கூறினார்.
ரசிகர்கள் “We Want Ollie” என கோஷம் எழுப்பியபோது, அவர் இறுதியாக மைதானத்தில் களமிறங்கியதும், அரங்கம் முழுவதும் கரகோஷம் வெடித்தது.
ரியூவின் உயரம் முன்னாள் NBA நட்சத்திரங்கள் யாவோ மிங், மனுட் பால், டாக்கோ ஃபால் உள்ளிட்டவர்களை விட கூடுதல். அவர் இவர்களை விட 2 அங்குலம் உயரமாக உள்ளார்.
ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கொண்டதிலிருந்து ரியூ ஒரு வைரல் நட்சத்திரமாக மாறியுள்ளார்.