கடமை நேரத்தில் காவல்துறை உத்தியோகத்தரின் தகாத செயல்: விதிக்கப்பட்ட தண்டனை
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், கடமை நேரத்தில் கைத்துப்பாக்கியுடன் தீவிர மதுபோதையில் பொலிஸ் ரோந்து வாகனத்தைச் செலுத்தி, கடுமையான தகாத செயலில் ஈடுபட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாண பொலிஸ் பிரிவில் 17 ஆண்டுகள் சேவையாற்றிய 40 வயதான கிறிஸ்டோபர் புரூட் என்ற உத்தியோகத்தரே இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டவராவார்.
கடந்த ஜனவரி மாதம், கிறிஸ்டோபர் தனது வீட்டில் மது அருந்திவிட்டு, இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் பொலிஸ் ரோந்து வாகனத்தை ஓட்டிச் சென்று மிட்லேண்டில் உள்ள தென் ஜோர்ஜியன் பே பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பணி மதிப்பீட்டுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இதன்போது அவருடன் கூட்டத்தில் பங்கேற்ற சக அதிகாரிகள் அவரிடம் மது மணம் வீசுவதைக் கண்டுபிடித்தனர். அதன்பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்குக்கும் அதிகமான மது அவரது உடலில் இருந்தது உறுதியானது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஒரு பொலிஸ் அதிகாரி, கடமை நேரத்தில் சீருடையுடன் இத்தகைய ஆபத்தான மற்றும் தகாத செயலில் ஈடுபட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வழக்கை விசாரித்த நீதிபதி எட்வர்ட் புருட்சியி, "இவரது பொறுப்பற்ற செயலால் அவரோ அல்லது வீதியில் சென்ற மற்றவர்களோ உயிரிழக்கும் வகையில் பெரும் விபத்து ஏற்படாமல் தப்பியது வெறும் அதிர்ஷ்டமும் தெய்வாதீனமும் தான்" எனக் கடுமையாகக் சாடினார்.
குறித்த பொலிஸ் அதிகாரிக்கு, 3,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன் 2 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், 2 ஆண்டுகள் நன்னடத்தைக் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டது.
எதிரித் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தனது நீண்டகால பொலிஸ் சேவையில் கண்ட கொடூரமான சம்பவங்களால் கிறிஸ்டோபர் 'அதிர்ச்சிக்குப் பிந்தைய மன உளைச்சல் நோயால்' பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் மதுவுக்கு அடிமையானதாகவும் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் உரையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் கிறிஸ்டோபர், தனது செயலுக்காகத் வெட்கப்படுவதாகவும், தனது பொலிஸ் குழுவிற்கு ஏற்படுத்திய களங்கத்திற்கு ஆழ்ந்த மனவருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.