சமூக வலைத்தளங்களில் இருந்து விலகும் ஹாரி- மேகன் தம்பதி
இனிமேல் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த போவதில்லை என ஹாரி, மேகன் தம்பதி அறிவித்துள்ளனர். உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த ஆண்டு விலகினர்.
இதனையடுத்து தற்போது இந்த தம்பதி தங்களது ஒரு வயது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். அத்துடன் ஹாரி, மேகன் ஆகிய இருவரும் ‘ஆர்க்கிவெல்' என்கிற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி மக்களுக்கு தொண்டு பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களது பணிகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இனிமேல் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த போவதில்லை என ஹாரி, மேகன் தம்பதி அறிவித்துள்ளனர்.
வளர்ச்சியை நோக்கிய தங்களது பயணத்தின் ஒரு படியாக சமூக வலைத்தளங்களை நிராகரிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இளவரசர் ஹாரியையும், அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான மேகனையும் இன்ஸ்டாகிராமில் 1 கோடிக்கும் அதிகமானோரும், பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.