பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையினர் ஒருவர் கைது; அதிரவைக்கும் உண்மை!
தவறான நடத்தை மற்றும் திருடுவதற்கு சதி ஆகிய குற்றங்களுக்காக பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையினர் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் வீடுகளை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், கைது செய்யப்பட்ட அந்த நான்கு எல்லை பாதுகாப்புப் படையினரில் ஒருவர் சட்டவிரோத புலம்பெயர்ந்தவராவார்.
இந்நிலையில் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்த பிரித்தானியா எக்கச்சக்கமாக செலவு செய்து பல முயற்சிகள் செய்துகொண்டிருக்கும் நிலையில், சட்ட விரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்புப் படையிலேயே சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஒருவர் பணியாற்றிவந்த விடயம் தெரியவந்ததையடுத்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தனது 30 வயதுகளிலிருக்கும் அந்த புலம்பெயர்ந்தோர், 20 ஆண்டுகளுக்குமுன் பால்கன் நாடுகளிலிருந்து ஒரு பதின்ம வயதினராக பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்துள்ளார்.தான் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற உண்மையை மறைத்து, பொய் சொல்லி, பிரித்தானியாவில் தங்கும் உரிமையை வென்றுள்ளார் அவர்.
அத்துடன், அடிப்படை பணி மற்றும் குற்றப் பின்னணி சோதனைகளில் வெற்றிபெற்று எல்லை பாதுகாப்புப் படையில் பணிக்கும் சேர்ந்துவிட்டார் அவர்.தற்போது வேறொரு குற்றச்செயலுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது உண்மை வெளிவரவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பணியிடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்புப் படையிலேயே சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஒருவர் பணியாற்றிவந்த விடயம் தெரியவந்துள்ளதால், உள்துறை அலுவலக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.