அர்ஜென்டினாவில் எரிவாயுக் குழாய் வெடிப்பு ; ஒருவர் பலி பலர் காயம்
அர்ஜென்டினாவின் புவனஸ் அயர்ஸ் மாகாணத்தின் லானுஸ் (Lanús) பகுதியில் எரிவாயுக் குழாய் வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெமெடியோஸ் டி எஸ்கலாடா (Remedios de Escalada) பகுதியில் உள்ள பெல்ட்ரான் (Beltrán) மற்றும் டெல் வாலே இபெர்லூசியா (Del Valle Iberlucea) வீதிகள் சந்திக்கும் பகுதியில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இயந்திரமொன்று எரிவாயுக் குழாயைச் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தப் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தைத் தொடர்ந்து அவசரகால மீட்புப் பிரிவினர் அந்தப் பகுதிக்கு விரைந்து காயமடைந்தவர்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்துக்கான முழுமையான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.