பிகாங்கிகம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு
கனடாவின் ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிகாங்கிகம் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியில் நபரொருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்தது தொடர்பாக, ஓண்டாரியோ மாகாணக் காவல் துறையின் ரெட் லேக் பிரிவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 30-ஆம் திகதி இரவு 8 மணிக்கு மேல், பிகாங்கிகம் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நபரொருவர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, பிகாங்கிகம் அமைதிப் படையினர் மற்றும் ஒன்றாரியோ பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தைக் மீட்டனர்.
அக்டோபர் 2 அன்று காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களுக்கு இதனால் வேறு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் பிகாங்கிகம் பகுதியில் காவல்துறையினரின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை மரண பரிசோதனை அதிகாரி மற்றும் ஓண்டாரியோ தடயவியல் மருத்துவச் சேவையுடன் இணைந்து, குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இவ்விசாரணையில் ரெட் லேக் மற்றும் சியூக்ஸ் லுக்அவுட் பகுதிகளைச் சேர்ந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பிராந்திய ஆதரவுக் குழு, தடயவியல் அடையாளப் பிரிவினர் உள்ளிட்ட பல முக்கியக் குழுக்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 1-888-310-1122 என்ற எண்ணிலோ அல்லது ரகசியமாகத் தகவல் தெரிவிக்க 1-800-222-8477 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.