ஒரு டொலரின் பெறுமதி 2 மில்லியன் ஈரான் ரியால்கள்: கடும் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக, ஈரானின் நாணயமான ரியால் வரலாறு காணாத சரிவைச் சந்தித்து திறந்த சந்தையில் ஒரு அமெரிக்க டொலருக்கு 2 மில்லியன் ரியால்களாகத் தாழ்ந்துள்ளது.
சுமார் 9.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஈரானில், இந்த நாணய வீழ்ச்சி மற்றும் தீவிர பணவீக்கம் காரணமாக மக்களின் கொள்வனவு திறன் கடுமையாகக் குறைந்துள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
போர் தொடங்குவதற்கு முன்பிருந்த விலைகளுடன் ஒப்பிடுகையில் அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய சராசரி விலையேற்ற விவரம்: சமையல் எண்ணெய்: 177% உயர்வு, கோழி இறைச்சி : 74% உயர்வு, தக்காளி: 71% உயர்வு, இன்சுலின் மருந்து (சர்க்கரை நோய் சிகிச்சை): 642% கடும் உயர்வு, குழந்தைகளுக்கான பால் மாவு: 95% உயர்வு, பாரசிட்டமால் மற்றும் அடிப்படை மருந்துகள்: 93% உயர்வு என தெரிவிக்கப்படுகின்றது.

தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் குடும்பங்களின் வாராந்திர மளிகைச் செலவுகள் 20% முதல் 30% வரை அதிகரித்துள்ளன.
குழந்தைகளுக்கான பராமரிப்பு நிலையக் கட்டணம் நாளொன்றுக்கு 50 லட்சம் ரியால்கள் வரை உயர்ந்துள்ளதால் சாதாரண குடும்பங்கள் பெரும் நிதிச் சுமையை எதிர்நோக்கியுள்ளன.
ஆடை மற்றும் சில்லறை வர்த்தகத் துறையில் விற்பனை 40% வரை சரிவடைந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை, தொழிலாளர் ஊதியம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்துள்ளதால், வரவிருக்கும் குளிர்காலத்திற்குள் பல சிறு வர்த்தகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் பல தசாப்தங்களாக விதித்து வரும் பொருளாதாரத் தடைகள், அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக ஏற்பட்ட துறைமுக முற்றுகைகள் மற்றும் உற்பத்தி முடக்கங்கள் என்பன நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக முடக்கியுள்ளன.