பிள்ளைகளைக் கடத்திய தாய் ஐரோப்பாவில் கைது!
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் நியூமார்க்கெட் பகுதியில் இருந்து தனது இரு மகன்களையும் கடத்திச் சென்ற எடிட்டா உஸ்டாஸ்ஸெவ்ஸ்கா வாட்கின்ஸ் (Edyta Ustaszewska Watkins) என்ற பணெ் நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
52 வயதான இவர், தற்போது கனடாவுக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திங்கள்கிழமை அன்று சிறையிலிருந்தவாறே காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கடத்தியதாக அவர் மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 2009-ஆம் ஆண்டு தந்தை ஸ்டீபன் வாட்கின்ஸுக்கு (Stephen Watkins) குழந்தைகளை வளர்க்கும் முழு உரிமையை நீதிமன்றம் வழங்கிய இரண்டே மாதங்களில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வார இறுதி நாட்களில் மட்டும் பிள்ளைகளைச் சந்திக்க அனுமதி பெற்றிருந்த எடிட்டா, தனது தந்தை டெட்டின் உதவியுடன் குழந்தைகளை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார்.
இந்த கடத்தலுக்கு உதவியதற்காக எடிட்டாவின் தந்தை டெட்டிற்கு 2012-இல் கனடா நீதிமன்றம் 18 மாத கால நிபந்தனைக்கால சிறைத்தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தனது பிள்ளைகளைத் தேடி அலைந்த தந்தை ஸ்டீபன், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் போலந்தில் இருப்பதை கண்டுபிடித்தார்.
எனினும், கனடா மற்றும் போலந்து நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளைப் பரிமாறிக்கொள்ளும் நேரடி ஒப்பந்தம் இல்லாததால் சிக்கல் நீடித்தது. குழந்தைகள் போலந்து கலாச்சாரத்துடன் முழுமையாக ஒன்றிப்போய்விட்டதால், அவர்களை மீண்டும் கனடாவுக்கு அனுப்புவது அவர்களின் மனநலனைப் பாதிக்கும் என்று கூறி, போலந்து நீதிமன்றம் குழந்தைகளைத் தந்தையிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது.
இதனால், சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக எடிட்டா அறிவிக்கப்பட்ட போதிலும், பல ஆண்டுகளாக அவரைக் கைது செய்ய முடியாமல் போனது. தற்போது 24 மற்றும் 21 வயதை எட்டியுள்ள அந்த மகன்கள் கனடா திரும்பினார்களா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
எனினும், கனடாவின் "மிகவும் தேடப்படும் குற்றவாளிகள்" பட்டியலில் இடம்பெற்றிருந்த எடிட்டா, இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.
அவர் தனது மகன்களுடனோ அல்லது முன்னாள் கணவருடனோ தொடர்பு கொள்ளக்கூடாது என நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்றரை தசாப்தங்களாக நீடித்த இந்த குடும்பப் போராட்டம், இப்போது நீதிமன்றில் விசாரணைக்கு வந்துள்ளது.