கனடாவில் இடம்பெறும் பரிசு அட்டை மோசடி குறித்து எச்சரிக்கை
கனடாவில் பரிசு அட்டைகள் தொடர்பில் இடம்பெறக் கூடிய மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நத்தார் பரிசாக கொள்வனவு செய்யப்பட்ட 300 டொலர் பெறுமதியான ஸெபோரா Sephora மற்றும் ஹோம் டிபொட் Home Depot பரிசு அட்டைகள் பயன்படுத்தும் போது வெறுமையாக இருந்ததாக டெனியல் வெனியர் Danielle Vanier என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கார்டுகளை பயன்படுத்தும் போது, எந்தவொரு தொகையும் இல்லையென தெரியவந்தது,” என வெனியர் தெரிவித்துள்ளார்.
ஸொப்பர்ஸ் ட்ரக் மார்ட் ஊடாக இந்த அட்டை கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அட்டை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு உண்டு எனவும் இது குறித்த முறைப்பாட்டை நிறுவனம் கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“எல்லோரும் பொறுப்பை பிறர்மீது தள்ள முயலுகிறார்கள். யாரும் நேரத்தை எடுத்துக்கொண்டு விசாரிக்க தயாராக இல்லை,” என வெனியர் குற்றம்சாட்டினார்.
மோசடிக்காரர்கள், அட்டைகளின் எண் மற்றும் குறியீட்டு இலக்கம் ஆகியவற்றை நகலெடுத்து மீண்டும் பேக்கிங் செய்து விற்பனைக்கு வைக்கின்றனர். சில நேரங்களில், போலி பார் கோட் ஸ்டிக்கர்களை வைத்தும் மோசடி செய்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய மோசடி தடுப்பு மையத்தின் (CAFC) ஜெஃப் ஹார்ன்காஸில் கூறுகையில், “அட்டை எதிலும் சேதம் ஏற்படவில்லையா என முதலில் சரிபார்க்க வேண்டும். அவதானமாக கொள்வனவு செய்ய வேண்டும். கவுண்டருக்குப் பின்புறம் வைத்திருக்கும் அட்டைகளை வாங்குவது சிறந்தது,” என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கிரெடிட் கார்ட் மூலம் கார்டுகளை வாங்குவது பாதுகாப்பாக இருக்கலாம், ஏனெனில் மோசடி நடந்தால் மீட்பு சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.