ஒன்ராறியோவில் பாரியளவில் விஸ்தரிக்கப்படும் சிறைகள்
ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் 2,500 புதிய படுக்கை வசதிகளை (beds) உருவாக்க மாகாண அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வரி செலுத்துவோரின் பணம் 3 பில்லியன் டொலர் செலவிடப்படும் என்று மாகாண சொலிசிட்டர் ஜெனரல் மைக்கேல் கெர்ஸ்னர் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை இது குறித்து கருத்து தெரிவித்த மைக்கேல் கெர்ஸ்னர், மாகாண அரசு புதிய சிறைச்சாலைகளை நிர்மானிக்கவுள்ளதுடன், தற்போதுள்ள சிறைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
வால்கர்டன் மற்றும் பிராம்ப்டன் (Brampton) பகுதிகளில் ஏற்கனவே மூடப்பட்ட சில சிறைச்சாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. படுக்கை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 நவம்பர் மாதத்திற்குள் 255 இடங்கள் சேர்க்கப்படும். மேலும், 700 புதிய சிறைச்சாலை அதிகாரிகளை (Correctional officers) பணியமர்த்தவும் அரசு தீர்மானித்துள்ளது.

ஆபத்தான குற்றவாளிகளை வீதிகளில் நடமாட விடாமல் கம்பிகளுக்குப் பின்னால் வைத்திருப்பதை உறுதி செய்யவும், சிறைச்சாலை ஊழியர்கள் பாதுகாப்பாகப் பணியாற்றத் தேவையான இடவசதி மற்றும் கருவிகளை வழங்கவும் இந்த நவீனமயமாக்கல் அவசியம், என்று கெர்ஸ்னர் குறிப்பிட்டார்.
செலவைக் குறைக்கும் நோக்கில் சில சிறைகள் நவீன கட்டுமானக் கூறுகளைக் (Modular components) கொண்டு கட்டப்படவுள்ளன. அரசாங்கத்தின் தரவுகளின்படி, ஒன்ராறியோ சிறைச்சாலைகள் தற்போது அவற்றின் கொள்ளளவை விட 127 சதவீதம் அதிகமாக நிரம்பியுள்ளன.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, 8,676 கைதிகளுக்கான வசதி கொண்ட சிறைகளில் சராசரியாக 11,058 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் 80 சதவீதமாக இருந்த சிறைக்கொள்ளளவு, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் திகதி நிலவரப்படி, சிறைகளில் உள்ளவர்களில் 81 சதவீதத்தினர் இன்னும் விசாரணைக்காகக் காத்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.