ஓட்டுநர் உரிமத்தில் குடியுரிமை குறித்த விவரம்: கனேடிய மாகாணமொன்றின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், ஓட்டுநர் உரிமம் மற்றும் அடையாள அட்டையில், ஒருவரது குடியுரிமை குறித்த அடையாளம் ஒன்றை சேர்ப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
ஆல்பர்ட்டா மாகாணம், மக்களுடைய ஓட்டுநர் உரிமம் மற்றும் அடையாள அட்டையில் அவர்கள் கனேடிய குடிமக்கள் என்பதைக் காட்டும் அடையாளம் ஒன்றைச் சேர்க்க முடிவு செய்துள்ளது.
அதாவது, இனி ஒருவருடைய ஓட்டுநர் உரிமம் அல்லது அடையாள அட்டையைப் பார்த்தாலே அவர் கனேடிய குடிமகனா என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.
இந்த திட்டம் 2026ஆம் ஆண்டு அமுலுக்கு வருவதாக ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான Danielle Smith தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம், பல விடயங்களை விரைவாகவும், எளிதாகவும், மேம்பட்ட முறையிலும் மாற்ற உதவும் என நாங்கள் நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், புலம்பெயர்தல் அமைப்புகளும், சட்ட அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குறிப்பாக, கனேடிய குடிமகன் அல்லாத ஒருவர் உணவகம் ஒன்றிற்குச் செல்லும்போதோ, வாகன சோதனைக்குட்படுத்தப்படும்போதோ, அல்லது வீடு வாடகைக்கு எடுக்க முயலும்போதோ, அவர்கள் பாரபட்சமாக நடத்தப்பட இந்த திட்டம் வழிவகை செய்யலாம் என அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.