சுவீடன் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி
சுவீடனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சுவீடன் நாடாளுமன்றமான ரிக்ஸ்டாகில் உள்ள 349 இடங்களுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், முன்னாள் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 176 இடங்களை கைப்பற்றியுள்ளது.

பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனின் கூட்டணிக்கு 173 இடங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் எதிர்க்கட்சி கூட்டணி மூன்று இடங்கள் வித்தியாசத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமாக இருந்த நிலையில், இறுதி எண்ணிக்கையில் சுமார் 50,359 வாக்குகள் மட்டுமே வித்தியாசமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பிரதமர் கிறிஸ்டர்சன் தனது ராஜினாமாவை அறிவித்ததுடன், நாடாளுமன்ற சபாநாயகரிடம் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தையும் சமர்ப்பித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்ற சபாநாயகர் முன்னெடுக்க உள்ளார். அதன்படி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
எனினும், தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், அதில் இடம்பெறும் கட்சிகளுக்கு இடையிலான கொள்கை வேறுபாடுகள் காரணமாக புதிய அரசாங்கத்தை அமைப்பதில் பேச்சுவார்த்தைகள் சவாலாக அமையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி தனிப்பட்ட கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை ஆண்டர்சன் முன்னெடுக்க உள்ளார்.
இதனிடையே, புதிய பிரதமர் தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பு செப்டெம்பர் 29ஆம் திகதிக்கு முன்னதாக நடைபெற வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவரை தற்போதைய அமைச்சரவை புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை தொடர்ந்தும் பணியாற்றும்.