கனடாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவு
கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த 2025 ஜூலையில் 14.6 சதவீதமாக இருந்த நிலையில், 2026 ஜூலை மாதத்தில் 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதேபோல, கோடைகாலப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதமும் 17.5 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாகச் சரிந்துள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் வரிகள் குறித்த ஆரம்பக்கட்ட பொருளாதார பயம் தணிந்துள்ளதால், வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் நம்பிக்கையுடன் இளைஞர்களைப் பணியில் அமர்த்தத் தொடங்கியுள்ளன.
கனடிய மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாகக் குறைத்ததைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு நுகர்வோர் செலவழிப்பது அதிகரித்துள்ளது.
சுற்றுலாத் துறை, உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் கோடைகால வேலைவாய்ப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.