உக்ரைனுக்கு எதிராக பிரிவினைவாதிகளுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு
உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், டொனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களில் உள்ள பிரிவினைவாத குழுக்களின் தலைவர் டெனிஸ் புஷிலின், தங்களின் கட்டுபாட்டில் இருக்கும் படைகளை உக்ரைனுக்கு எதிராக எல்லையில் ஒன்று திரட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை ரஷியா உடன் பகிர்ந்து வருகிறது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014-ம் ஆண்டு ரஷியா ஆக்கிரமித்து அப்பகுதியை தனது நாட்டுடன் சட்டவிரோதமாக இணைத்து கொண்டுள்ளது.
இதையடுத்து உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களை ரஷியாவுடன் இணைக்க வேண்டும் என அந்த மாகாணங்களில் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாத குழுக்கள் உருவானது.
உக்ரைன் பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தும் இந்த பிரிவினைவாத குழுக்களுக்கு ரஷியா ஆயுத உதவிகளை செய்து வந்தது. தற்போது ரஷியாவின் 40 சதவீத ராணுவ படைகள் தாக்குதல் நடத்த ஏதுவாக உக்ரைன் எல்லையில் முகாமிட்டுள்ளன.
கடந்த வாரம் சில படைகளை ரஷியா பின் வாங்கியிருந்தாலும் இப்போதும் அங்கு 1,50,000 படைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ரஷிய அதிபர் புதின், உக்ரைன் மீது அடுத்த வாரம் அல்லது அடுத்த சில தினங்களில் தாக்குதலை தொடங்கலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டொனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களில் உள்ள பிரிவினைவாத குழுக்களின் தலைவர் டெனிஸ் புஷிலின், தங்களின் கட்டுபாட்டில் இருக்கும் முழு படைகளையும் உக்ரைனுக்கு எதிராக எல்லையில் ஒன்று திரட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் பிரிவினை வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களில் உள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பெருமளவில் அங்கிருந்து ரஷியாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.