தேநீர் சிந்தியதால் ஊழியருக்கு 50 மில்லியன் டாலர் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்
அமெரிக்காவில் பார்சல் கட்டும் போது செய்த தவறு காரணமாக ஸ்டார்பக்ஸ் தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு 50 மில்லியன் டாலர்கள் வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ள சம்பவம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது.
கடந்த 2020-ம் லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உள்ள ஸ்டார்பக்ஸ் விற்பனையகத்தில் இருந்து தேநீர் விநியோகம் செய்யும் பணியில் மைக்கேல் கார்சியா என்ற ஊழியர் ஈடுபட்டிருந்தார். சம்பவம் நடந்த தினம் மைக்கேல் விநியோகம் செய்ய எடுத்துச் சென்ற தேநீர் பார்சல் சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது.
பலத்த தீக்காயங்கள்
இதை துளியும் எதிர்பார்க்காத மைக்கேல் அதனை வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்ய வாகனத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பார்சல் சரியாக மூடப்படாததால் தேநீர் அவர் மீது சிந்தியது.
இதில் மைக்கேல் இடுப்பின் கீழ் பகுதி தொடையின் உள்பகுதி உள்ளிட்டவற்றில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் அவர் தனக்கு நேர்ந்த கதியை நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளார்.
"ஸ்டார்பக்சில் வேலை செய்யும் ஊழியர் அலட்சியமாக எரியும் சூடான பானங்களில் ஒன்றை பாதுகாக்க தவறிவிட்டார்.
இதனால் அது மைக்கேலுக்கு ஒப்படைக்கப்பட்ட ஒரே நொடியில் அவரின் மடியில் உடனடியாக விழுந்தது, என மைக்கேல் தரப்பு வழக்கறிஞரான நிக்கோலஸ் ரோவ்லி எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.
அதோடு, "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலமுறை தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும், தீக்காயங்களால் ஏற்பட்ட சிதைவு, வலி, செயலிழப்பு மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுடன் மைக்கேல் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தார்," என்றும் வழக்கறிஞர் கூறினார்.
இந்த தீர்ப்பு குறித்து ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் ஜேசி ஆண்டர்சன் கூறுகையில், நீதிபதி அறிவித்துள்ள இழப்பீடு தொகை அதிகமாக இருந்தது என்றும், அதைக் குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.