கனடாவில் 6,600 தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: சமீபத்திய தகவலொன்று
Key organizer of Canada Airport gold heist says his money was taken during kidnapping in Pakistan: கனடா கனடா விமான நிலையமொன்றில் 400 கிலோ எடையுள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய நபர், தனது பணம் பாகிஸ்தானில் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கனடா விமான நிலையமொன்றில் 400 கிலோ எடையுள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அந்த கொள்ளையின் மூளையாக செயல்பட்டது தான்தான் என தெரிவித்துள்ளார் ஒருவர்.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டன.

கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள வேறு சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்துள்ளது, ஏற்கனவே வந்த நபர் மோசடியாளர் என்பது.
அந்த பார்சல்களில், 6,600 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. 400 கிலோ எடையுள்ள அவற்றின் மதிப்பு 22 மில்லியன் டொலர்கள்!
சினிமா பாணியில் நடந்த அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 9 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், அவர்களில் சிலர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.
இந்நிலையில், அந்த தங்கக்கட்டிகளை கொள்ளையடிப்பதற்கு உதவியாக போலி ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்த, முன்னாள் ஏர் கனடா நிறுவன ஊழியரான பர்ம்பால் சித்து (Parmpal Sidhu) என்பவர் தொடர்புடைய வழக்கு ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த வழக்கில், அர்சலான் சௌத்ரி (Arsalan Chaudhary) என்பவர் சாட்சியமளித்துவருகிறார்.

நேற்று அவர் சாட்சியமளிக்கும்போது, சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது, அந்தக் கொள்ளைச் சம்பவத்தின் மூளையே தான்தான் என்று கூறியுள்ளார் சௌத்ரி.
அந்தக் கொள்ளையை திட்டமிட்டதே தான்தான் என்று கூறியுள்ள சௌத்ரி, சித்து குறித்து தான் கேள்விப்பட்டுள்ளதாகவும், ஆனால், அவரை தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், தான் கொள்ளையடித்த தங்கக்கட்டிகளில் மூன்றில் ஒரு பங்கை விற்று, சுமார் 300,000 முதல் 400,000 டொலர்களுடன் தான் பாகிஸ்தான் சென்றதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தான் கடத்தப்பட்டதாக தெரிவித்த சௌத்ரி, தன்னைக் கடத்தியவர்கள் தன்னைக் கொடுமைப்படுத்தி தன் பணத்தை பிடுங்கிக்கொண்டதாகவும், கனடாவில் தான் மறைத்துவைத்துள்ள மீதமுள்ள தங்கம் குறித்து கேட்டு அறிந்துகொண்டு அதையும் திருடிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை தொடர்கிறது.