கனடா பொலிஸார் பெற்றோர்களுக்கு விடுத்துள்ள புதிய எச்சரிக்கை
"தி காம்" என்ற இணையவழியில் சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து கனடாவின் டர்ஹாம் பிராந்தியப் பொலிஸார் பெற்றோர்களுக்கு மீண்டுமொரு அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
பிரபல சமூக வலைத்தளங்கள் மற்றும் கணினி விளையாட்டுக்கள் வழியாகச் சிறுவர்களை இலக்குவைத்து, அவர்களை ஏமாற்றி, மிரட்டிப் பாலியல் சுரண்டல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தும் நோக்கில் இக்குழுவினர் செயல்பட்டு வருவதாகக் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
8 வயதுடைய சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிஸ்கார்ட், டெலிகிராம், ஸ்னாப்சாட், ரோப்லாக்ஸ், மைன்கிராஃப்ட், ட்விட்ச் மற்றும் ஸ்டீம் போன்ற செயலிகள் வாயிலாக இக்குழுவால் குறிவைக்கப்படுவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

இக்குழுவினர் முதலில் சிறுவர்களிடம் நட்பு அல்லது போலி காதலை வெளிப்படுத்தி நம்பிக்கையை வளர்த்து, பின்னர் பயம் மற்றும் குற்ற உணர்ச்சியைப் பயன்படுத்தி அவர்களைத் தங்கள் முழுப் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகின்றனர்.
இதன் மூலம் தகுதியற்ற மற்றும் பாலியல் ரீதியான படங்கள்/காணொளிகளைப் பகிர வைப்பது, சுய தீங்கு செய்துகொள்ளத் தூண்டுவது மற்றும் பொலிஸாரைத் திசைதிருப்பும் போலி 911 அவசர அழைப்புகள் போன்ற அபாயகரமான குற்றங்களில் சிறுவர்களை அறியாமலேயே ஈடுபடுத்துகின்றனர்.
மேலும், சிறுவர்களின் தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் பகிர்வதாகக் கூறி மிரட்டி, அவர்களைத் தொடர்ந்து பணிய வைக்கும் தந்திரங்களையும் இக்குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் பிகரிங் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தலுக்கும் இக்குழுவிற்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், தற்போது மேலும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் பொலிஸார் இந்த இரண்டாம் கட்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடத்தையைக் கூர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் இரகசியமாக மறைமுகச் செயலிகளைப் பயன்படுத்துவது, திடீர் மனநிலை மாற்றங்கள், போன்களில் அதிக இரகசியத்தன்மை பேணுவது மற்றும் இணையத்தில் புதிதாக அறிமுகமான நபரிடம் அளவுக்கு அதிகமான பயம் அல்லது பிணைப்பைக் காட்டுவது போன்ற மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.