சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி காலமானார்!
சுசுகி மோட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இந்திய கார் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொழிலதிபருமான ஒசாமு சுசுகி, தனது 94ஆவது வயதில் காலமானார்.
லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 25ஆம் திகதி உயிரிழந்ததாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் கெய்ரோவில் பிறந்த ஒசாமு, உலகப் புகழ் பெற்ற சுசுகி மோட்டார்ஸ் குழுமத்தின் நிறுவனர் குடும்பத்துடன் திருமணம் செய்த பின், அந்த தொழிலில் முன்னணி நபராக செயலாற்ற தொடங்கினார்.
1958ஆம் ஆண்டு சுசுகி குழும தொழிலில் சேர்ந்த அவர், 1978இல் நிறுவனத்தின் தலைவரானார். 1982ஆம் ஆண்டு அவர் இந்திய ஓட்டோமொபைல் சந்தையில் தடம் பதித்தது திருப்பு முனையாக அமைந்தது.
இந்தியாவின் மருட்டி நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து, மருட்டி சுசுகி கார்களை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார்.
குறிப்பாக இந்த நிறுவனத்தின் மருட்டி 800 கார், இந்திய மற்றும் இலங்கைச் சந்தையில் பிரபலமான காராக மாறியது. மத்தியதர குடும்பங்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் இந்த கார் இருந்தது.
அப்போது தொடங்கி தற்போது வரை, இந்திய கார் சந்தையில் சுசுகி நிறுவனத்தின் பங்களிப்பு முன்னிலையில் உள்ளது. தற்போதும், இந்திய கார் சந்தையில் மருட்டி சுசுகி, 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
மறைந்த ஒசாமு சுசுகிக்கு. சோகோ என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். ஒசாமுவின் மறைவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பலவற்றின் தலைவர்கள், தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
ஓட்டோமொபைல் துறையில் அவரது தொலைநோக்கு பார்வை, உலக அளவில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.