கனடாவில் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய குடும்பம்
கனடாவின் ஒட்டாவா உணவுக் வங்கிக்கு இதுவரை இல்லாத அளவிலான 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
இது, நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அமைப்பின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தனிநபர் நன்கொடையாகும். இந்த பெரும் நன்கொடையை பிராங்க்லின் ஹோல்ட்ஃபோர்ஸ்டர் (Franklin Holtforster) மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.
அவர்களின் குடும்பம் ஒட்டாவாவில் 40 ஆண்டுகளுக்கு முன் குடியேறியதாகவும், நகரம் தங்களுக்கு அளித்த வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இத்தீர்மானம் எடுத்ததாகவும் ஹோல்ட்ஃபோர்ஸ்டர் கூறியுள்ளார்.

உணவு பாதுகாப்பின்மை என்பது கற்பனை செய்ய முடியாத ஒன்று. உணவு என்பது அடிப்படைத் தேவையாகும். அரசாங்கம் மட்டும் இதைச் சரியாக கையாள முடியவில்லை; எனவே மக்கள் தாமாக முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நன்கொடை 10 ஆண்டுகளுக்கு, வருடத்திற்கு 250,000 என வழங்கப்படும். இதன் மூலம் உணவுக் வங்கியின் ஒட்டாவா முழுவதும் பரவியுள்ள வலைப்பின்னல் அமைப்புகள் வழியாக உணவு வாங்கல் மற்றும் விநியோகம் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் 30 மில்லியன் டொலர் திரட்ட வேண்டிய சவாலில் இருந்து நாம் தொடங்குகிறோம். இந்த 10 ஆண்டுகளுக்கான நிதி உறுதி, எங்களுக்கான நம்பகமான ஆதாரமாக இருக்கும் என ஒட்டாவா உணவு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ரேச்சல் வில்சன் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பாரிய தொகை உணவு வங்கிக்கு வழங்கியதனால் ஹோல்ட்ஃபோர்ஸ்டர் குடும்பத்தின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.