கனடாவில் சகோதரியை மிரட்டி பல மில்லியன் டொலர் கைப்பேசிகளை திருடிய நபர்
கனடாவின் ஒட்டாவா நகரில், பல ஆண்டுகளாக தனது சகோதரியை மிரட்டி பல மில்லியன் டொலர் பெறுமதியான கைப்பேசிகளை திருடிய நபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது.
லட்சக்கணக்கான டொலர் மதிப்புள்ள கைப்பேசிகளை மோசடி செய்து திருடிய வழக்கில் 45 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா காவல் துறை தெரிவித்துள்ளது.
பெல் கனடா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஒட்டாவா காவல் துறையின் நிதி குற்றப்பிரிவு இந்த விசாரணையை மேற்கொண்டது.

காவல்துறையின் செய்திக்குறிப்பின்படி, இந்தச் சம்பவங்கள் ஜூன் 2022 மற்றும் செப்டம்பர் 2025 க்கு இடையில் நடந்துள்ளன. இதில் ஒரு ஆணும் அவரது சகோதரியும் ஈடுபட்டுள்ளனர்.
அந்தச் சகோதரி பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. "பெல் கனடா நிறுவனத்தில் பணிபுரிந்த தனது சகோதரியை, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தொடர்ந்து மிரட்டியும், துன்புறுத்தியும், அவரிடம் இருந்து பலவந்தமாக முறைகேடான வழிகளில் கைப்பேசிகைகளைப் பெற்றுள்ளார்.
பின்னர் அந்தப் பேசிகள் அந்த நபரிடம் வழங்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன" என்று ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த மோசடியால் ஏற்பட்ட மொத்த இழப்பு 7 மில்லியன் டாலருக்கும் அதிகமாகும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஒட்டாவாவைச் சேர்ந்த ரபி காசிஸ் என்பவர்பேரில், 5,000 டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் திருட்டு, 5,000 டாலருக்கும் அதிகமான மோசடி, குற்றச் செயலில் ஈடுபடச் சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டு துன்புறுத்துதல் மற்றும் மிரட்டிப் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே, குற்றம்சாட்டப்பட்ட நபரின் சகோதரி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த மேலதிக தகவல்கள் எதையும் அவர்கள் வெளியிடவில்லை.