ஒன்டாரியோவை உறையவைக்கும் கடும் பனிக்காற்று எச்சரிக்கை
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பெரும்பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தெற்கு ஒன்டாரியோ முழுவதையும், மேலும் மாகாணத்தின் வடக்கு பகுதிகளின் பெரும்பகுதியையும் உள்ளடக்கும் வகையில் “மஞ்சள் குளிர் எச்சரிக்கை” அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சில பகுதிகளில் காற்றின் தாக்கத்தால் உணரப்படும் குளிர்ச்சி -35 பாகை செல்சியஸ் வரை குறையக்கூடும் என வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது.
இந்த கடும் குளிர் நிலை திங்கட்கிழமை வரை நீடிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவா நகரிலும் இந்த கடும் குளிரின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. சனிக்கிழமை அங்கு காற்றின் தாக்கத்தால் -34 பாகை வரை குளிர்ச்சி பதிவானதாக என்வைரன்மெண்ட் கனடா தெரிவித்துள்ளது.
மேலும், டொராண்டோ பெரும்பாக பகுதியில் சனிக்கிழமை பனிக்காற்று வீசியதுடன், -33 பாகை வரை காற்று குளிர்ச்சி உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், மேற்கு கனடாவில் நிலவும் வானிலை ஒன்டாரியோவின் நிலைக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
ஆல்பர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் இதமான வானிலை நிலவி வருவதால், அங்கு தினசரி வெப்பநிலை சாதனைகள் கூட முறியடிக்கப்பட்டுள்ளன.