திடீரென பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்து: 14 பேர் உயிரிழப்பு
இந்தோனேஷியாவில் படகு தீ பிடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேஷியா தீவுகளுக்கு பிரசித்தி பெற்ற நாடு. இங்குள்ள ஏராளமான தீவுகளில் உள்ள மக்களின் பொது போக்குவரத்து படகுகள் மூலம் நடைபெற்று வருகிறது.
மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்தோனேஷிய தீவுகளை ரசிப்பதற்காக இங்கு வருவது உண்டு.
இந்த நிலையில், கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள குபாங்கில் நகரில் இருந்து கலாபாஹி பகுதியை நோக்கி, "கேஎம் எக்ஸ்பிரஸ் கான்டிகா 77" என்ற பயணிகள் படகு சென்றுகொண்டிருந்தது. அதில், 230 பயணிகள் உள்ளிட்ட 240 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், நடுக்கடலில் படகு சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக படகில் தீ பிடித்து விபத்துக்குள்ளானது.
இந்த படகு விபத்தில் சிக்கி 14 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இதில் 226 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியா மீட்புப்படையினர் தெரிவித்துள்ளார்.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.