கனடாவில் பூங்காவொன்றில் ஓநாயினால் தாக்கப்பட்ட பெண்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா நகரில் ஓநாய் தாக்குதலில் பெண் ஒருவர் படு காயமடைந்துள்ளார். எம்பஸி எவன்யூ மற்றும் இன்வர்ஹவுஸ் டிரைவ் பகுதிகளில் அமைந்துள்ள லூயிஸ் பிராட்லி பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவரைக் காணவில்லை என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. பூங்காவில் தேடுதல் நடத்தும் போது, அந்த பெண் கடுமையான காயங்களுடன் விழுந்து கிடப்பதனை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
பீல் அவசர சிகிச்சை ஊழியர்கள் உடனடியாக உயிர் காக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த பெண் இன்று காலை தான் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர் இரவு முழுவதும் அங்கிருந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. த
ற்போது குற்றச்செயல் தொடர்பான சான்றுகள் எதுவும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகள் அந்தப் பெண் ஓநாய் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறியுள்ளனர்.
தாக்குதல் குழந்தைகள் விளையாடும் இடத்தின் அருகிலுள்ள மரத்தின் பின்னால் இரவில் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பூங்காவை அண்டி வாழ்வோர் அச்சமடைந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.