பென்டகனின் உளவுப்பிரிவு தலைவர் பதவி நீக்கம்
அமெரிக்க இராணுவத்தின் தலைமையிடமான பென்டகனின் உளவுப்பிரிவு தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெப்ரி க்ரூஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை மேலும் இரு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறை விளக்கம்
இதற்கான உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்செத் பிறப்பித்து உள்ளதாகவும் இந்த பணி நீக்கம் தொடர்பாக பாதுகாப்பு துறை விளக்கம் அளிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்று கடந்த ஜூன் மாதம் கசிந்த அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த மதிப்பீடு முற்றிலும் தவறானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் பென்டகனின் உளவுப்பிரிவு தலைவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.