காசாவில் உணவு, குடிநீரின்றி தவிக்கும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள்
காசாவில் ஹமாஸ் அமைப்புகளின் இடங்களைக் குறிவைத்து கடந்த ஏழு நாட்களாக இஸ்ரேல் இராணுவம் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்குள்ள மக்கள் உணவு, குடிநீரின்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல் காரணமாக காசாவில் இதுவரை 1400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 340,000 க்கும் மேற்பட்ட மக்கள் காசாவைவிட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள்
இந்நிலையில் காசா நகரில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் உணவு மற்றும் குடிநீர் இன்றித் தவித்து வருகின்றனர் என ஐநாவின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காசாவில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறா விட்டால் நிலைமை மிகவும் மோசமாகும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
இதேவேளை காசாவில் 3600 க்கும் மேற்பட்ட இலக்குகளில் வான்வழி தாக்குதல் நடத்தப்படுவதாக வும் 4000 தொன் எடையுள்ள 6000 குண்டுகள் இதுவரை வீசப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.