ஈரான் போர் எதிரொலி ; அமெரிக்காவில் பெற்றோல் விலை வரலாறு காணாத உயர்வு
ஈரான் மீதான போரை தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் (அமெரிக்காவில் 3.78 லீற்றர்) 4 டொலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் வாரத்தில் பெற்றோல் விலை ஒரு கலன் 4.03 டொலராக இருக்கும் என கேஸ் பட்டி (GasBuddy) தரவுகள் கணித்துள்ளன.

இது, கடந்த 2012 ஆம் ஆண்டில் பதிவான ஒரு கலனுக்கான 3.83 டொலர் என்ற முந்தைய சாதனையை விட மிக அதிகமாகும்.
அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தைக் கொண்டாடும் அதிகாரப்பூர்வ விடுமுறை தினமான தொழிலாளர் தினம் (Labour Day) திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்வுள்ள நிலையில், இந்த நீண்ட வார இறுதியில் பலரும் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
GasBuddy தரவுகளின்படி, கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி நாட்டின் சராசரி பெற்றோல் விலை ஒரு கலனுக்கு சுமார் 4.13 டொலராக இருந்தது.
இது கடந்த ஆண்டின் சராசரியை விட சுமார் ஒரு டொலர் கூடுதலாகும்.
4 டொலர் என்ற இந்த விலை எல்லையானது அமெரிக்க நுகர்வோருக்கு மிகவும் தாங்க முடியாத ஒரு புள்ளியாக (Pain Point) மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் எதிர்வரும் நவம்பர் இடைக்காலத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது.