ஓமிக்ரான் தொற்றை அழிக்கும் தடுப்பூசி: ஃபைஸர் வெளியிட்ட நம்பிக்கையூட்டும் தகவல்
ஃபைஸர்-பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 3 டோஸ் எடுத்துக்கொண்டால் ஓமிக்ரான் மாறுபாட்டை கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று முதல்கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவி்க்கின்றன.
அதேவேளை, இரு டோஸ் ஃபைஸர்-பயோ என்டெக் தடுப்பூசி செலுத்தினால் ஓமிக்ரான் தொற்றுக்கு எதிராகக் குறிப்பிட்ட அளவு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.
ஓமிக்ரான் மாறுபாடானது உலகில் 40கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அமெரிக்காவில் 25கும் மேற்பட்ட மாகாணங்களில் ஓமிக்ரான் மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக ஓமிக்ரான் மாறுபாடானது இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாடுடன் ஒப்பிடுகையில் ஆபத்து குறைவு என கூறப்பட்டு வருகிறது. ஆனால் இது முதற்கட்ட ஆய்வில் வெளியான தரவுகள் மட்டுமே என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் முன்னெடுத்த ஆய்வில், 3 டோஸ் பைஸர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஓமிக்ரான் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓமிக்ரான் மாறுபாட்டால் மனிதர்கள் உடலில் 3-வது டோஸ் தடுப்பூசி மூலம் உருவாகிய சிடி8+ டி செல்கள் அதிகமாக பாதிக்கப்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.
இதனாலையே, பெரும்பாலான நாடுகள் தற்போது மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.