பறக்கும் விமானத்தில் இருந்து கழன்று விழுந்த உதிரி பாகம்: நூலிழையில் உயிர் தப்பிய நபர்
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் விமான உதிரி பாகம் ஒன்று கழன்று விழுந்துள்ள சம்பவத்தில் காவல்துறை ஊழியர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
குறித்த உதிரி பாகமானது மாகாண சட்டமன்ற வளாகத்தில் பெரும் சத்தத்துடன் வந்து விழுந்துள்ளது. மட்டுமின்றி, அப்போது பணியில் இருந்த காவல்துறை ஊழியர் ஒருவருக்கும் சுமார் 6ல் இருந்து 8 அடி தொலைவில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் கண்டிப்பாக அவருக்கு கடும் அதிர்ச்சியை அளித்திருக்கும் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகத்திற்கு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தரப்பு சம்பவயிடத்தை பார்வையிடவும், தொடர்புடைய உதிரி பாகத்தை கைப்பற்றவும் திங்கட்கிழமை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த உதிரி பாகமானது ஆறு முதல் ஏழு பவுண்டுகள் எடை கொண்டது மற்றும் ஒரு பெரிய பயணிகள் விமானத்தின் இறக்கை பகுதியில் இருந்து உடைத்திருக்கலாம் என கூறுகின்றனர்.
ஆனால் சம்பவம் நடந்த அன்று விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவே தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக பரபரப்பாகவும், அதிக மக்கள் கூட்டமாகவும் காணப்படும் பகுதியிலேயே குறித்த உதிரி பாகம் விழுந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.